வரி போட்டது போட்டதுதான்…. திரும்ப பெற முடியாது- நிர்மலா சீதாராமன்

 

வரி போட்டது போட்டதுதான்…. திரும்ப பெற முடியாது- நிர்மலா சீதாராமன்

பத்திரிகை மற்றும் வாரஇதழ்களுக்கு பயன்படுத்தப்படும் நியூஸ்பிரிண்ட் பேப்பர் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியை திரும்ப பெற முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் நியூஸ்பிரிண்ட் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உள்நாட்டில் 10 லட்சம் டன் அளவுக்கே நியூஸ்பிரிண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தேவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும், அன்கோட்டட் மற்றும் லைட் வெயிட் கோட்டட் தாள்களையும் உள்நாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்வது இல்லை.

நியூஸ்பிரிண்ட்

பத்திரிகை மற்றும் வார மற்றும் மாத இதழ்கள் நிறுவனங்களுக்கு விளம்பர வருவாய் போதிய அளவில் இல்லாததால் நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் நியூஸ்பிரிண்ட் பேப்பர்கள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் பத்திரிகை நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 10 சதவீதம் வரியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

கோட்டட் பேப்பர்

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிதி மசோதா 2019 தொடர்பான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உள்நாட்டு விலைக்கே இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு பேப்பர் தயாரிப்பாளர்கள் வாங்குபவர்களை தேட வேண்டியது உள்ளது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் நியூஸ்பிரிண்ட் பேப்பர் விலை 700 டாலரிலிருந்து 500 டாலராக (டன்னுக்கு) குறைந்துள்ளதே இதற்கு காரணம். உள்நாட்டு தயாரிப்பாளர்களும் நன்றாக செயல்பட வைக்கும் நோக்கில் இறக்குமதி நியூஸ்பிரிண்ட் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதனால் இறக்குமதி வரியை திரும்ப பெற முடியாது.

நாம் மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறோம். ஆனால் மறைமுகமாக இறக்குமதியை அனுமதிக்கிறோம். அது ஒன்றும் புரியவில்லை. இந்திய தொழில்துறையை இந்த வகையான தாக்குதலில் இருந்து தப்பிக்க வைக்க இது போன்ற (இறக்குமதி வரி) நடவடிக்கைகள் தவிர்க்க முடியாது என்ற கருத்தை கட்டாயம் உறுப்பினர் பாராட்டுவார். இவ்வாறு அவர் பேசினார்.