ரூ.4,350 கோடிக்கு ருச்சி சோயா நிறுவனத்தை வாங்கும் யோகா குரு பாபா ராம்தேவ்

 

ரூ.4,350 கோடிக்கு ருச்சி சோயா நிறுவனத்தை வாங்கும் யோகா குரு பாபா ராம்தேவ்

பிரபல சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு யோகா குரு பாபா ராம்தேவ்ன் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் வாங்குகிறது.

சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ருச்சி சோயா நிறுவனம் தனது தேவைக்காக ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தது.  கடுமையான நிதிநெருக்கடியால் வங்கிகளில் வாங்கிய கடனை அந்த நிறுவனத்தால் திரும்ப செலுத்த முடியவில்லை. அந்நிறுவனம் ரூ.9,345 கோடி கடனை திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

ருச்சி சோயா

இந்த சூழ்நிலையில் 2017ல் ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஸ்டார்ண்ட் சார்ட்டட் பேங்க் மற்றும் டி.பி.எஸ். பேங்க் ஆகியவை அந்த நிறுவனத்தை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் மனு தாக்கல் செய்தன. அதனை ஏற்றுக்கொண்ட திவால் நீதிமன்றம் ருச்சி சோயா நிறுவனத்தை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்த அனுமதி அளித்தது. மேலும் அதனை நிறைவேற்ற ஆர்.பி. ஒருவரையும் திவால் நீதிமன்றம் நியமனம் செய்தது.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

இதன் தொடர்ச்சியாக ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்தன. அதில், பதஞ்சலி நிறுவனம் வென்றுள்ளது. ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு வாங்க பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் விலை கோரி இருந்தது. பதஞ்சலி நிறுவனத்தின் விண்ணப்பத்துக்கு திவால் நீதிமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், திவால் நடவடிக்கையை நிறைவேற்ற ஆன மொத்த செலவின தொகை கணக்கிட்டு அடுத்த விசாரணையின் போது (ஆகஸ்ட் 1) தாக்கல் செய்ய வேண்டும் என ஆர்.பி.க்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக, ருச்சி சோயா நிறுவனத்தை யோகா குரு பாபா ராம்தேவ்ன் பதஞ்சலி நிறுவனம் வாங்குவது உறுதியாகி விட்டது.