முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது

புதுதில்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. 1954-ஆம் ஆண்டு முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. பாரத ரத்னா விருதை முதன்முதலாக 1954-ல் பெற்றவர், தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி தான். அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.

இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, காலமானவர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ஆம் ஆண்டில் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதன்பின்னர், 1966-ஆம் ஆண்டில் அந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உள்பட பல்வேறு நபர்களுக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகிய மூன்று பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தி வெளியிட்டுள்ளார். சமூக சேவகர் நனாஜி 2010-ஆம் ஆண்டிலும், கவிஞர் பூபென் ஹசாரிகா 2011-ஆம் ஆண்டிலும் காலமாகி விட்டனர்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜி, தேசத்திற்காக தன்னலமின்றி அயராது பணியாற்றியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.