மான் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர்….. சந்தோஷத்தில் மிதக்கும் சல்மான்….

 

மான் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர்….. சந்தோஷத்தில் மிதக்கும் சல்மான்….

மான் கி பாத் நிகழ்ச்சியில் எனது தைரியம் மற்றும் உறுதியின் கதையை குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டி பேசியது இன்னும் சிறப்பாக செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்கிறார் சிறப்பு திறன் கொண்ட (மாற்று திறனாளி) தொழிலதிபர் சல்மான்.

உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத் அருகே  உள்ள ஹமிர்புர் கிராமத்தை சேர்ந்தவர் சிறப்பு திறன் கொண்ட (மாற்று திறனாளி) சல்மான். இவர் காலணி மற்றும் சோப்பு பொடி தயாரிப்பு கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் மாற்று திறனாளிகள்தான். சல்மான் போராடி வென்ற கதை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியவந்தது. 

சல்மான்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது மான் கி பாத் நிகழ்ச்சியில், சல்மானின் வாழ்க்கையை குறிப்பிட்டு அவரது தைரியம் மற்றும் தொழில்முனைவோர் நடவடிக்கைக்கு மரியாதை செய்வதாக பாராட்டி பேசினார். சல்மானுக்கு இது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக சல்மான் கூறியதாவது: பிரதமர் எங்களை பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட அது ஊக்குவிக்கிறது.  நான் போலியாவால் பாதிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். பின் எனது பலவீனத்தை என்னுடைய வலுவான சக்தியாக மாற்றினேன். 2 ஆண்டுகளாக வேலைக்காக போராடினேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

பிரதமர் மோடி

அதனால் சொந்தமாக தொழில் தொடங்குவதில் கவனம் செலுத்த தொடங்கினேன். அரசிடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. நிறுவனத்தை தொடங்கும்போது நிதி நெருக்கடி உள்பட பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தோம். எனது நிறுவனத்தில் பணியாளர்கள் பெரும்பகுதியினர் தெய்வீக உடல் (மாற்று திறனாளிகள்) கொண்டவர்கள். எங்களது நிறுவனம் சோப்பு பொடி மற்றும் காலணிகளை தயாரிக்கிறது. நாங்கள் 400 முதல் 500 மாற்று திறனாளிகளை பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.