பேஷண்ட் பேரு ஸ்னேக் பாபு, வயசு 7, படமெடுத்த பாம்பு! அலறிப்போன டாக்டர்கள்!

 

பேஷண்ட் பேரு ஸ்னேக் பாபு, வயசு 7, படமெடுத்த பாம்பு! அலறிப்போன டாக்டர்கள்!

”சொல்லுங்க என்ன பிரச்னை” என டாக்டர் கேட்க, ”வயித்துல அடிபட்டிருக்கு டாக்டர்” என்கிறார் மனோஜ். ”சட்டையை கழட்டிட்டு காட்டுங்க” என டாக்டர் கேட்க, ”ஏற்கெனவே சட்டை எல்லாம் உரிச்சிடுச்சி டாக்டர்” என சொல்லி கையில் இருந்த பையிலிருந்து ஒரு நல்லபாம்பை தூக்கி காட்டுகிறார்.

ஒடிஷாவில் இருக்கும் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புறநோயாளி பிரிவுக்கு வரும் 60 வயது மனோஜ் குமார் என்பவர், மருத்துவரை பார்க்கச் சீட்டு கேட்கிறார். நோயாளியின் பெயர் மற்றும் வயதை கேட்கிறார் கம்பவுண்டர். பெயர் ஸ்நேக் பாபு, ஆம்பளப்புள்ள, வயது 7 என்றும் தெரிவிக்கிறார் மனோஜ் குமார். கம்பவுண்டர் தரும் சீட்டை எடுத்துக்கொண்டு மருத்துவர் இருக்கும் அறைக்கு தனியாகச் செல்கிறார். ”சொல்லுங்க என்ன பிரச்னை” என டாக்டர் கேட்க, ”வயித்துல அடிபட்டிருக்கு டாக்டர்” என்கிறார் மனோஜ். ”சட்டையை கழட்டிட்டு காட்டுங்க” என டாக்டர் கேட்க, ”ஏற்கெனவே சட்டை எல்லாம் உரிச்சிடுச்சி டாக்டர்” என சொல்லி கையில் இருந்த பையிலிருந்து ஒரு நல்லபாம்பை தூக்கி காட்டுகிறார். எப்படி நடந்ததோ தெரியவில்லை, ஆனால் அடுத்த வினாடி அருகிலிருக்கும் நர்சம்மா இடுப்பில் இருக்கிறார் டாக்டர், பேச்சு வரவில்லை அவருக்கு!

Snake Babu treated

”என்னய்யா புள்ளயை அழைச்சுகிட்டு வர்றமாதிரி பாம்பை ஆஸ்பிடலுக்கு எடுத்துட்டு வந்திருக்க, அதுக்கு தனியா வெட்ரினரி ஆஸ்பிடல் இருக்கு, அங்கே போய்யா” என டாக்டர் விரட்ட, மனோஜ் குமார் நிதானமாக சொல்கிறார், ”பயப்படாதீங்க டாக்டர், இவன் நம்ம பையன்தான், வீட்டுக்குப் பக்கத்துல அடிபட்டு கிடந்துச்சு, கீரிப்பிள்ளை கடிச்சிருக்கும் போல, வெட்ரினரி டாக்டர்கிட்டதான் போனேன், ஆனா கதவு பூட்டியிருந்திச்சி, சரின்னு இங்க அழைச்சுட்டி வந்துட்டேன், ஆய்ன்மெண்ட் இருந்தா தடவிவிடுங்க டாக்டர்” என டாக்டர் முகத்துக்கு நேராக பாம்பை நீட்ட, டாக்டர் மெதுவாக கம்பவுண்டர் பக்கம் தலையை திருப்புகிறார். “என்னைய விட்டுடுங்க டாக்டர், எனக்கு இப்பதான் ரெண்டாவது கல்யாணம் பேசியிருக்காங்க” என கம்பவுண்டர் எகிறிகுதித்து எஸ்கேப் ஆக முயல, ஒருவழியாக அவரை இழுத்துபிடித்து நிறுத்திவைத்து பாம்புக்கு மருந்து தடவிவிட்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் ஸ்நேக்பாபு நலமடைந்து காடு திரும்பினார்.