நீதியை உடனடியாக வழங்க முடியாது ஆனால் உங்களால் தொடர்ந்து தாமதமாக வைத்திருக்க முடியாது! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு வெங்கையா நாயுடு பதில்

 

நீதியை உடனடியாக வழங்க முடியாது ஆனால் உங்களால் தொடர்ந்து தாமதமாக வைத்திருக்க முடியாது! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு வெங்கையா நாயுடு பதில்

நீங்கள் நீதியை உடனடியாக வழங்க முடியாது ஆனால் உங்களால் தொடர்ந்து தாமதமாக வைத்திருக்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் புதிய உயர் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. புதிய உயர் நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பேசுகையில் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

நாட்டில் சமீபத்திய சம்பவங்கள் புதிய வீரியத்துடன் பழைய விவாதத்தை தூண்டியுள்ளன. காலத்துக்கு ஏற்ப குற்றவியல் நீதி அமைப்பு தனது நிலைப்பாடு, நேரம் குறித்த அதன் அணுகுமுறை, மெத்தனம் மற்றும் ஒரு குற்றவியல் விஷயத்தை முடிப்பதற்கு எடுக்கும் நேரம் ஆகியவற்றை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நீதி உடனடியாக வழங்க முடியாது மற்றும் அது ஒரு போதும் பழிவாங்கும் வடிவத்தை எடுக்க முடியாது. நீதி பழிவாங்கும் வடிவத்தை எடுத்தால் அது தனது நீதியின் இயல்பை இழந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத் என்கவுண்டர்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கருத்துக்கு குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பதில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், உங்களால் நீதியை உடனடியாக வழங்க முடியாது. அதேசமயம் நீதியை நீங்கள் தொடர்ந்து தாமதமாக வைத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களது கடமையை சிறப்பாக செய்ய வேண்டிய பகுதி இது  என தெரிவித்தார். ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார படுகொலை சம்பவத்தில் உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டுதான் உயர் நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் தலைமை நீதிபதி பாப்டே பேசியிருந்தார்.