குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது….. கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடியில் மாநில அரசுகள்…..

 

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது….. கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடியில் மாநில அரசுகள்…..

குடியுரிமை திருத்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் இந்த சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை மதோவை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து அது சட்டமாக மாறியது. குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு

மத்திய கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஆளும் கட்சியான பா.ஜ.க. குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான இந்திய அரசிதழ் வெளியீடு

இந்நிலையில் நேற்று முதல் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், குடியுரிமை (திருத்த) சட்டம் 2019 (2019இன் 47) இன் பிரிவு 1இன் துணைப்பிரிவு (2)ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவதில், இந்த சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதியாக 2020 ஜனவரி 10ம் தேதியை மத்திய அரசு இதன் மூலம் நியமிக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மாநில அரசுகள் அதனை கட்டாயம் அமல்படுத்தியே தீர வேண்டும்.