காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் ஷாக்கான மாணவர்கள்

 

காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் ஷாக்கான மாணவர்கள்

குஜராத்தில் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் சுபலம் ஷா விகாஸ் சங்குல் என்ற அமைப்பு அந்த பெயரில் சுயநிதி பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும் அது மாநில அரசின் மானியத்தை பெற்று வரும் கல்வி அமைப்பாகும். சுபலம் ஷா விகாஸ் சங்குல் பள்ளிகளில் கடந்த சனிக்கிழமையன்று தேர்வு நடைபெற்றது. 9 வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேர்வில், மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. காந்தியின் மரணம் இயற்கையானது அல்ல என அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் எப்படி தற்கொலை  செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பள்ளி வகுப்பறை

மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வில், உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதும் குறித்தும், சட்டவிரோத நபர்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்தும் மாவட்ட தலைமை காவலருக்கு எப்படி புகார் கடிதம் எழுதுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளநிலையில், மதுவிற்பனை அதிகரிப்பு குறித்து புகார் கடிதம் எழுதும்படி கேள்வி கேட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குஜராத் கல்வி அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மகாத்மா காந்தி

இது குறித்து கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை. இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.