கோவாவில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு இலக்கு.. பா.ஜ.க. அரசாங்கம் பகல் கனவு காண்கிறது-காங்கிரஸ் கிண்டல்

 
பிரமோத் சாவந்த்

2050ம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை உறுதி செய்வதை கோவா இலக்காக கொண்டுள்ளது என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதை குறிப்பிட்டு, தோல்வியுற்ற பா.ஜ.க. அரசாங்கம் பகல் கனவு காண்கிறது என்று காங்கிரஸ் கிண்டல் செய்தது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் கிளீன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 2023 மாநாட்டில் கலந்து கொண்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேசுகையில், 2050ம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை உறுதி செய்வதை கோவா இலக்காக கொண்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் பா.ஜ.க. அரசாங்கம் பகல் கனவு காண்கிறது என்று காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கோவா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான யூரி அலெமாவோ கூறியதாவது: மோசமான கடந்த கால சாதனையுடன், 2050ம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளுடன் 100 சதவீதம் புதுப்பிக்க எரிசக்தி இலக்கை அடைவது பற்றி முதல்வர் பேசாமல் இருப்பது நல்லது. கோவாவில் மக்கள் அடிக்கடி மின் வெட்டு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு கனவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், தோல்வியுற்ற பா.ஜ.க. அரசாங்கம் பகல் கனவு காண்கிறது, 

யூரி அலெமாவோ

 அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 வேலை வாய்ப்புகளுடன் 150 மெகா வாட் என்ற புதிய இலக்கை முதல்வர் நிர்ணயித்துள்ளார். இது முற்றிலும் நடைமுறைக்கு மாறானது. அழிவுகரமான தம்னார் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சோலார் மற்றும் புதுப்பிக்க எரிசக்தியில் மெதுவாக செல்லுங்கள் என்ற அணுகுமுறையை மாநில அரசு வேண்டுமென்றே தேர்ந்தெடுத்துள்ளது. கோவாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் பாதிப் பணத்தையாவது அரசாங்கம் முதலீடு செய்தால், அது முழு மாநிலத்தின் மின் தேவையையும் பூர்த்தி செய்யும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.