Home Tour வீடியோவால் நேர்ந்த கொடுமை! யூடியூபர் வீட்டில் நகைகள் கொள்ளை

 
s

மத்திய பிரதேச மாநிலத்தில் யூடியூபர் வெளியிட்ட  வீடியோவால், ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டைச் சுற்றிக் காட்டி, தங்கத்தைக் காண்பித்த யூடியூபரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில், மோகனி கிராமத்தில் உள்ள யூடியூபர் ரச்னா குர்ஜாரின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் புகுந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம் மற்றும் ஒரு அட்டைப்பெட்டி எனர்ஜி பானத்தையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குர்ஜாரின் கூற்றுப்படி, குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​அதிகாலை 2 மணியளவில் திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் எங்களை அறைக்குள் பூட்டிவிட்டு, பின்னர் திருட்டில் ஈடுபட்டனர். சுமார் 8 முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் ஒரு அட்டைப்பெட்டி எனர்ஜி பானம் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றனர். மேலும், தங்கள் முகங்கள் பதிவாகாதபடி, சிசிடிவி கேமராக்களின் கோணங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர் என்றார். இதுதொடர்பாக அவர் நார்வார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவ்புரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் முலே, கொள்ளைச் சம்பவத்தை உறுதிசெய்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

யூடியூபரான குர்ஜார், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். குர்ஜார், சமீபத்தில் தனது வீடு, நகைகள், பணம் மற்றும் வாழ்க்கை முறையைக் காட்டும் Home Tour காணொளிகளைப் பதிவிட்டிருந்தார். அதில், அவர் தனது வீட்டின் நுழைவாயில் முதல் அறைகள் வரையிலான பல்வேறு பகுதிகளைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு காணொளியில், அவர் நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை ஒரு மேஜையின் மீது வைத்துப் படம்பிடித்துள்ளார். கொள்ளையர்கள் இந்தக் காணொளிகளைப் பார்த்து, அவற்றைப் பயன்படுத்தி குற்றத்தைத் திட்டமிட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.