“என்னால முடியல மா... செத்துப்போறேன்”- வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
மும்பையில் 23 வயதான ஐடி ஊழியர் திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவைச் சேர்ந்த 23 வயதான ஐடி ஊழியரான வைஷ்ணவி பிரவீன் ஜரண்டே திருமணமான 4 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டார். வைஷ்ணவி, ஓம்கார் சஞ்சய் கிசாரே என்பவரை மே 9 அன்று திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்காக 45 லட்சம் ரூபாய் செலவழித்து, 116 கிராம் தங்க நகைகள் வழங்கிய நிலையிலும், வரதட்சணை கொடுமையால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. வைஷ்ணவி கணவரும், மாமனார், மாமியாரும் கார் வாங்குவதற்காக கூடுதலாக 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதற்காக அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு, வைஷ்ணவி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் அவர் வேலைக்காக பெங்களூரு சென்றார். ஜூன் மாத இறுதியில் புனே திரும்பிய பிறகு, அவர் தனது திருமண வீட்டில் இருந்தபடியே ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். வைஷ்ணவி தனது கணவர், மாமியார் மற்றும் மாமனாரால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். புகாரின்படி, செப்டம்பர் 24 ஆம் தேதி இரவு வைஷ்ணவி தனது தாயை தொலைபேசியில் அழைத்து, தனது மாமியாரின் கொடுமைகளை கூறியுள்ளார். அன்று இரவு சுமார் 11:30 மணியளவில், வைஷ்ணவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வைஷ்ணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் ஓம்கார் சஞ்சய் கிசாரே மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பின்னரே வழக்கின் உண்மையான விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

