உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு கேல் ரத்னா விருது!

2024 -ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இன்று (17/01/2025) வழங்கினார். உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. தேர்வான விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் விருதுகளை வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக செயல்பட்டதற்காக 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு, கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. துப்பாக்கி சுடும் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார் இந்திய வீராங்கனை மனு பாக்கர் என்பது குறிப்பிடதக்கது. இதேபோல் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 2024-ம் ஆண்டு தனது 18 வயதில் 18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் குகேஷ். இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுகளை வழங்கினார். பாரா ஒலிம்பிக் 2024 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்க பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.