காரை இடிச்சதுக்குனு இப்படியா?... விக்கித்து நின்ற பழ வியாபாரி - பேராசிரியரை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

 
பேராசிரியர்

சாலைகளில் அவ்வப்போது வாகனங்களுக்கு இடையே முட்டல் மோதல் உரசல்கள் ஏற்படும். இவை தவிர்க்க முடியாதவை. இரு வாகன ஓட்டிகளும் சண்டையிட்டுக் கொள்வார்கள். தகாத வார்த்தைகளைப் பேசுவார்கள். அப்புறமாக இருவரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் அரங்கேறியுள்ள சம்பவம் முகம் சுளிக்க வைக்கிறது. போபாலில் அயோத்யா நகர் சாலையில் ஏழை பழ வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளார். 

சாலையைக் கடக்க முற்படும்போது ஒருவரின் காரில் அந்த வியாபாரியின் தள்ளுவண்டி லேசாக உரசியுள்ளது. உடனே அந்தக் காரிலிருந்து இறங்கிவந்த பெண் வியாபாரியை தகாத வார்த்தைகளிள் திட்டியுள்ளார். உடனே அந்த வியாபாரி "சாரி மேடம்” எனக்கூறி மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத அந்தப் பெண் தள்ளுவண்டியிலிருந்த பழங்கள் அனைத்தையும் சாலையில் வீசி எறிகிறார். கையறு நிலையில் எதுவுமே செய்ய முடியாமல் விக்கித்து நின்றுள்ளார் அந்த வியாபாரி. இந்த சம்பவம் நடந்து 4 நாட்களாகிவிட்டன.


ஆனால் சமூக வலைதளங்களில் தற்போது தான் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் போபாலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எனவும் தகவல் வெளியுள்ளது. நெட்டிசன்கள் அனைவரும் அந்த பேராசிரியரை கழுவி ஊற்றி வருகின்றனர். பணக்கார திமிரை இப்படி தான் ஒரு ஏழை வியாபாரியிடம் காட்டுவாதா என்றும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருந்துகொண்டு இதுபோன்ற கேவலமான இழிசெயலை செய்வதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.