தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு
டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர்.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில், லோதி காலனியில் உள்ள பி.கே. தத் காலனியில், சாவ்லா ஸ்வீட்ஸ் எதிரில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறைக்கு (DFS) அழைப்பு வந்தது. தீயணைப்பு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட பெண் நா தழுதழுக்க, "வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது... நாங்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளோம்... தயவுசெய்து விரைவாக உதவி அனுப்புங்கள்" என்று கூறினார். சில நிமிடங்களில் அவரது அழைப்பும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அழைப்பைத் தொடர்ந்து, காவல்துறையும் தீயணைப்புத் துறையும் உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்றனர். காவல்துறையினர் அடங்கிய குழு ஒன்று இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது. மூன்று ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. மீட்புப் பணிகள் தொடங்குவதற்குள், தீ வீட்டை முழுவதுமாக எரித்துவிட்டது. மேல் தளத்திலிருந்து அடர்த்தியான புகை மண்டலங்கள் வெளியேறி, அக்கம்பக்கத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். உள்ளே, கருகிய நிலையில் மூன்று உடல்களைக் கண்டனர். உயிரிழந்தவர்கள் 45 வயதுப் பெண் மற்றும் அவரது 7, 13 வயதுடைய இரண்டு மகள்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான சரியான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது, ஆனால் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

