SEBI தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? - ராகுல் காந்தி கேள்வி..
"SEBI தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?" என் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் போலி நிறுவனங்களை உருவாக்கி பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அதானி குழுமம் முறைகேடு குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டது. இதில் அந்நிறுவனம் உருவாக்கிய போலி நிறுவனங்களில், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பல ஆயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார் என்றும், இதன் காரணமாகவே அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் , மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில், “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது. அப்படியென்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.
செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கௌதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?
சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதற்கான காரணமும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2024
Honest investors across the country have pressing questions for the government:
- Why… pic.twitter.com/vZlEl8Qb4b