உக்ரைன் போர் எதிரொலியால், வரலாறு காணாத உச்சத்தில் கோதுமை விலை..

 
கோதுமை

இந்தியாவில் உற்பத்தி வீழ்ச்சி மற்றும்  உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக கோதுமை விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது.  

இந்தியாவின் நான்கு பெருநகரங்களில் கோதுமை மாவு விலை அதிகரித்திருக்கிறது.     சென்னையில்  ரூ.34,  மும்பை - ரூ.49, கொல்கத்தா - ரூ.29,  டெல்லியில் ரூ.27ஆக கோதுமை மாவு விலை உள்ளது.  கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்த விலை உயர்வை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.  கோதுமையின் இந்த வரலாறு காணாத விலையேற்றத்துக்கு ,  நாட்டில் கோதுமை உற்பத்தி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதே காரணமாக சொல்லப்படுகிறது.  நடப்பாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி பாதிப்பக்கட்டதோடு ,  கையிருப்பும்  குறைந்துவிட்டது.  

கோதுமை பயிர்

 மேலும் நாட்டிற்கு வெளியே இந்திய கோதுமையின் தேவை அதிகரித்து வருகிறது. அதாவது   உக்ரைன் -ரஷ்யா போர்  மற்றும்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதன்  காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81% அதிகரித்துள்ளது.  கடந்த மார்ச் மாதத்தில் கோதுமையின் சில்லறை பணவீக்கம் 7.77 சதவீதத்தை எட்டியுள்ளது.  கோதுமையின் இந்த  விலையேறத்தால் பேக்கரி ரொட்டி, மற்றும் கோதுமை சார்ந்த உணவுப்ப் பண்டங்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.  

கோதுமை

அதேநேரம்  பிரதம அமைச்சர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும், நாடு முழுவதும்  உள்ள  சுமார் 81  கோடி பேருக்கு  5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.  உள்நாட்டில் கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில்  பயனாளிகளுக்கு கோதுமையை குறைத்து வழங்க  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இலவச உணவு திட்டத்தின் கீழ்  பீகார், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் கோதுமையை பெறுவதில்லை..  மற்றபடி டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களுக்கும் குறைவாக  கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எந்த மாற்றமுமின்றி  கோதுமை ஒதுக்கீடு செய்யப்படும் என் தெரிவிக்கப்படுள்ளது.