2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடத்தில் அவர்களை எங்க கட்சி ஆதரிக்கும்.. மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடத்தில் அவர்களை எங்க கட்சி ஆதரிக்கும் ஆனால் அவர்களும் மற்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகத்தில் செய்தியாளர்களில் பேசுகையில் கூறியதாவது:  2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எங்கெல்லாம் பலமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் போட்டியிடட்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம், அதில் தவறில்லை. ஆனால் அவர்கள் மற்ற அரசியல் கட்சிகளையும் ஆதரிக்க வேண்டும். 

காங்கிரஸ்

இருப்பினும் ஆதரவை பெற, காங்கிரஸூம் மற்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும். தொகுதி பங்கீடு பார்முலா வலுவாக உள்ள பகுதிகளில் பிராந்திய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். வலுவான பிராந்திய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். எதிர்வரும் மக்களவை தேர்தல் போரில் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான சாத்தியமான மூலோபாயத்தை திரிணாமுல் காங்கிரஸின் நிலைப்பாட்டை முதல் முறையாக மம்தா பானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார். ஆனால் தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார். மம்தாவின் இந்த திடீர் மனமாற்றத்தக்கு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றியை காரணம் என கூறப்படுகிறது.