அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு

 
வி.கே.பாண்டியன்

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.

வி. கே. பாண்டியன் - தமிழ் விக்கிப்பீடியா

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் உருவெடுத்தவர் வி.கே.பாண்டியன். சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்து அக்கட்சி ஆட்சியை பாஜகவிடம் இழந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நவீன் பட்நாயகிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இன்று வரை என் மூதாதையர்களின் சொத்துக்கள் தான் என் வசம் உள்ளது. நான் IAS சேரும்போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளது. பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு என்மீதான விமர்சனங்கள் காரணமாக இருந்திருந்தால் தொண்டர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.


ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் பிஜு ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கை விமர்சிப்பதை காட்டிலும் அவருக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்து வந்தனர். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த விகே பாண்டியனுக்கு கேபினேட் அந்தஸ்து கொண்ட தலைவர் பதவியை வழங்கினார் நவீன் பட்நாயக். கட்சியிலும் ஆட்சியிலும் முதல்வருக்கு அடுத்தபடியாக விகே பாண்டியன் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வருகிறார். அடுத்த முதல்வராக விகே பாண்டியனையே நவீன் பட்நாயக் முன்னிறுத்துவார் என்றும் கூறப்பட்ட நிலையில், ஒடிசாவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக திகழ்ந்து வந்த விகே பாண்டியன் திடீரென அரசியலில் இருந்து விலகுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.