2019ல் மோடியை திருடன் என்று அழைத்ததால் என்ன நிகழ்ந்தது என்பதை பார்த்தார்கள், 2024ல் மீண்டும் பார்க்கலாம்.. அனிரூத்

 
மோடி

2019ல் பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்தால் என்ன நிகழ்ந்தது என்பதை அவர்கள் (காங்கிரஸ்) பார்த்திருக்கிறார்கள். 2024ல் மீண்டும் பார்க்கலாம் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் அனிரூத் எச்சரிக்கை செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து ராஜஸ்தான் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில அமைச்சருமான விஸ்வேந்திர சிங்கின் மகன் அனிரூத் டிவிட்டரில், ராகுல் காந்தி ஏமாற்றமடைந்தார். மற்றொரு நாட்டின் பாராளுமன்றத்தில் சொந்த நாட்டை அவமதிப்பர். அல்லது ஒருவேளை அவர் இத்தாலியை தனது தாயகமாக கருதுகிறார் என பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனிரூத் அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச மேடையில் நம் நாட்டை நீங்கள் அவமதிக்க முடியாது. என்னை பொறுத்தவரை இது ஒரு முழுமையான தேச விரோதச் செயல். 

அனிரூத்

இங்கிலாந்தில் ராகுல் காந்தி அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதில் எந்த உண்மையும் இல்லை.  ஏனென்றால் நாம் மிகவும் பாதுகாப்பான நாட்டில் இருக்கிறோம், நம்மை சுற்றியுள்ள அனைவரும் (இலங்கை,பாகிஸ்தான்) வீழ்ச்சியடைந்து வரும் தருணத்தில் நாம் பொருளாதார ரீதியாக மிகவும் வலுவாக இருக்கிறோம்.  ஜி20 தலைமை பதவியும் இந்தியாவிடம் உள்ளது. அவருக்கு (ராகுல் காந்தி) இந்தியாவின் மீது இவ்வளவு அக்கறை இருந்தால், அவர் ஏன் ராஜஸ்தானில் இறங்கி தனது சொந்த முதல்வரின் செயலிழப்பை சரி செய்யவில்லை?பரவலான ஊழல் உள்ளது, மக்கள் பட்டப்பகலில் சுடப்படுகிறார்கள், அதைத்தானே அவர் வலியுறுத்துகிறார். இங்கே மூன்று மாதங்களாக இந்த வித்தை (நடைப்பயணம்) செய்து பொதுமக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து, வெளிநாடுகளுக்கு சென்று இப்போது இப்படியெல்லாம் சொல்கிறீர்கள். 

ராகுல் காந்தி

இந்தியாவின் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா ராகுல் காந்தி கூறியிருப்பது நாட்டு மக்கள் மீதான தாக்குதல். மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்துள்ளனர், பிரதமர் மோடிக்கு சர்வதேச மேடைகளில்  கொஞ்சம் மரியாதை உள்ளது. இது இந்தியா மீதான தாக்குதல், பிரதமர் ஒரு சர்வாதிகாரி அல்ல. மேலும் இந்த நபர்களுக்கு (ராகுல் காந்தி) சொல்வதற்கு எதுவும் இல்லை. எனவே அதையே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். பிரதமர் மோடியை திருடன் என்று அழைப்பதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். 2019ல் பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்தால் என்ன நிகழ்ந்தது என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். 2024ல் மீண்டும் பார்க்கலாம். முதலில் ராஜஸ்தானுக்கு வந்து இங்குள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள், பிறகு வேறு எதையும் யோசியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.