வினேஷ் போகத் மேல்முறையீடு: 3 மணி நேரம் விசாரணை.. இன்று இரவு தீர்ப்பு..

 
வினேஷ் போகத் மேல்முறையீடு: 3 மணி நேரம் விசாரணை.. இன்று இரவு தீர்ப்பு..  


இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு தொடர்பாக இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.  

நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார்.  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நான்கு முறை உலக சாம்பியனும் ,  நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யுய் சுசாகியை வினேஷ் வீழ்த்தி முன்னேறினார். தொடர்ந்து காலிறுதிப் போட்டியில் 7 - 5 என்கிற புள்ளி கணக்கில் உக்ரைன் வீராங்கனை ஒக்சனா லிவாச்சியை வீழ்த்தினார்.  தோல்வியுற்ற ஒக்சனாவும் முன்னாள் உலக சாம்பியன் ஆவார். தொடர்ந்து  நடைபெற்ற   அரையிறுயில் கியூபா வீராங்கனை யுஸ்னெலிஸ் குஸ்மன் லொபெஸை  5-0 என்கிற புள்ளி கணக்கில்  வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

உலகின் முன்னணி வீராங்கனைகள் 3 பேரை ஒரே நாளில் வீழ்த்தி பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில்,  100 கிராம் கூடுதல் எடையால் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இறுதிப்போட்டியில்  அமெரிக்காவின் சாரா அன் ஹில்டிபிராண்டை எதிர்கொள்ள  தாயாராகிக் கொண்டிருந்த வினேஷுக்கு எடை பரிசோதித்து பார்த்ததில் 50 கிலோவை விட 100 - 150 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.  இதனையடுத்து  அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன்  வினேஷுக்கு  மல்யுத்த போட்டி விதிகளின்படி 50 கிலோ எடை பிரிவில் கூடுதல் எடை உள்ளதால் வெளிப்பதக்கம் கூட வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.  

வினேஷ் போகத் மேல்முறையீடு: 3 மணி நேரம் விசாரணை.. இன்று இரவு தீர்ப்பு..  

விடிய விடிய ஸ்கிப்பிங், சைக்கிளிங் என கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. அவரது முடியை வெட்டியும், ஆடையைக் குறைத்தும் கூட 50 கிலோ எடைக்கு கொண்டுவர முடியவில்லை என இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் விளக்கமளித்தது. அத்துடன் தொடர் உடற்பயிற்சி காரணமாக  நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு வினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், ‘இனியும் போராட என்னிடம் வலிமை இல்லை’ எனக்கூறி ஓய்வை அறிவித்தார்.  

 இதனிடையே ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். அத்துடன் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க கோரியும்  மேல்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார். இந்த மேல்முறையீட்டை மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நேற்று 3 மணி நேரம் விசாரித்தார். அப்போது வினேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கமளித்தனர்.  வாதங்கள் முடிவடைந்த நிலையில்,வினேஷ் போகத் மேல்முறையீடு தொடர்பாக இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.