ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழில் தங்க, வெள்ளி சிலைகள்!

 
அனந்த் அம்பானி திருமண அழைப்பிதழ்

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சென்டின் மகளான ராதிகா மெர்சென்ட்டுக்கும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. 3ஆம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இவர்களின் திருமண அழைப்பிதழில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கை உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன. இந்து கடவுள்களின் படங்களுடன் வண்ண வண்ண அட்டைகளில் திருமண நிகழ்வு குறித்த தகவல்களும் மற்றொரு சிறு பெட்டியில், தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த பட்டு துணிகள், உலர் பழங்கள் உள்ளிட்டவையும் திருமண அழைப்பிதழ் அட்டையில் உள்ளன. இந்த திருமண அழைப்பிதழ் சினிமா, அரசியல், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.