21ம் தேதிக்குள் வீட்டை காலி பண்ணுங்க.. மணிஷ் சீசோடியாவுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு..

மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. அதன்படி டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து கடந்த 26ம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனால் டெல்லி துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா விலகினார். இதேபோல் ஹவாலா பண மோசடி வழக்கில் கைதான டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு அதிஷி, பரத்வாஜ் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆகையால் அவர்களுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும், சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினர் அரசு இல்லத்திலேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர். இதனால் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அரசு இல்லத்துக்கு குடியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை செய்து கொடுக்குமாறு சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினருக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.