கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யூடி காதர் தேர்வு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக மக்கள் பணி செய்ய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின்னர் இன்று பெங்களூருவில் உள்ள விதான் சவுதா சட்டமன்ற வளாகத்தில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீவிர மக்கள் பணி செய்ய வேண்டும், மக்கள் மனதை வெல்ல வேண்டும், எதிர்ப்பு அரசியல் பிரிவினைவாத அரசியல் இருக்கக் கூடாது என்று கட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் சபாநாயகராக தேர்வான யூ டி காதர் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு துணை சபாநாயகர், கொரடா தேர்வு குறித்தும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கபட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு சட்டமன்றம் கூடிய நிலையில், யூ டி காதர் சபாநாயகராக பதவி ஏற்று கொண்டார். முதல்வர் சித்தராமையா துணை முதல்வர், டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் இணைந்து யூ டி காதர் அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற சரித்திரத்தில் முதன் முறையாக முஸ்லிம் வகுப்பில் இருந்து சபாநாயகராக யூ டி காதர் இன்று பதவி ஏற்றுள்ளார்.