சீன அதிபருக்கு வாழ்த்து.. கேரள முதல்வர் பினராயி விஜயனை விமர்சித்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன்

 
தந்தை பெரியார் பிறந்தநாள்; தமிழில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவு!

மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனை மத்திய பா.ஜ.க. அமைச்சர் விமர்சனம் செய்தார்.

சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய மக்கள் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜி ஜின்பிங் பங்கேற்றார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங்கிற்கு கேரள முதல்வர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

ஜி ஜின்பிங்

கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில், சீன மக்கள் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள். உலக அரசியலில் சீனா ஒரு முக்கிய குரலாக உருவெடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மேலும் வளமான சீனாவை அடைவதற்கான தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவு செய்து இருந்தார்.

வி.முரளீதரன்

சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வரை மத்திய அமைச்சர் விமர்சனம் செய்தார். வெளியுறவு துறை இணையமைச்சர் வி.முரளீதரன் கூறுகையில், பினராயி விஜயன் கேரள முதல்வராக இருப்பதால், மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீன அதிபரை வாழ்த்துவதை விட, இந்திய மக்களை பற்றி அவர் அதிக அக்கறை காட்ட வேண்டும் என தெரிவித்தார்.