ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்  என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், லண்டனில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் கோரினர். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் அமளியில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன.

ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்தார். அவரது அறிக்கைகள் அனைத்து உறுப்பினர்களாலும் கண்டிக்கப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன். அவர் (ராகுல் காந்தி) மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிரிராஜ் சிங்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்று லண்டனில் ராகுல் காந்தி கூறினார். இது மக்களவையை அவமதிக்கும் செயலாகும். இந்த அறிக்கை குறித்து சபாநாயகர் அவர் (ராகுல் காந்தி) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது ஜனநாயகத்தை அவமதித்ததற்காக அவர் (ராகுல் காந்தி) மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.