ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்..

 
rajesh bhushan

48 மணிநேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை  அறுவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா  மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த  அவ்வப்போது மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.  அதன்படி மாநில அரசுகள் பல்வேறு கொரோன  கட்டுப்பாடுகளை விதித்து, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

corona virus

இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளன.  இருப்பினும் கொரோனா மற்றும் ஒமைக்ரான்  வைரஸ்களின் பரவல் வேகம் சற்று கலக்கத்தையே ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் இதுவரை 4,868 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பில் சிக்கியுள்ளனர்.  இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்ஸிஜன் இருக்க வேண்டும்.  நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு வழங்க தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் திரவநிலை மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை தடையின்றி எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Oxygen

அதேபோல் , மாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று  மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார நிலையங்களிலும்,  திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கேற்ப பேக்கப் வசதி,  விரைவாக நிரப்பும் வசதிகள் இருக்க  வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கான்சென்ட்ரேட்டர்கள், வெண்டிலேட்டர்கள்,  BiPAP, ஆக்சிஜன், எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் உபகரணங்களும் போதிய அளவில் இருப்பதை மாநில சுகாதாரத்துறை உறுதி படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.