இந்திய வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்..

2024 -25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைக்கிறார்.
மத்திய பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 1ம் தேதிநாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. இதனையடுத்து இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதியான நேற்று தொடங்கியது.
தொடர்ந்து இன்று ( ஜூலை 23ஆம் தேதி) நடப்பு நிதியாண்டிற்கான (2024 -2025) முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அமைத்துள்ள ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். அதேபோல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட்டும் ஆகும். இதன்மூலம் இந்திய வரலாற்றில் தொடா்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை நிா்மலா சீதாராமன் முறியடிக்கிறாா். அதே நேரம் அதிகபட்சமாக 10 முறை மொராா்ஜி தேசாய் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘வளா்ந்த இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற இலக்குடன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்க இருக்கிறாா். இந்த உரையின்போது கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளையும் நிா்மலா சீதாராமன் பட்டியலிட இருக்கிறார். அத்துடன் கடந்த 3 ஆண்டு காலமாக காகிதப் பயன்பாடு இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது போல், இந்த முறையும் டிஜிட்டல் பயன்பாட்டுடன் காகிதமில்லா பட்ஜெட் முறையே தொடர இருக்கிறது.