கர்நாடகாவில் பரபரப்பு.. முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி..

 
siddaramaiah

மைசூரு மாநகர வளர்ச்சி குழும நிலம் முறைகேடு புகாரில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்கு நடத்த அனுமதி வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.  

மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் ( மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.  ஆனால் தனது மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும்,  மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றி தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள என்றும் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்திருந்தார்.  அதுவும் நான் முதல்வராக இருந்த போது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும்,  பாஜ ஆட்சி காலத்தில் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

Karnataka CM designate Siddaramaiah met Governor

இருப்பினும் முதலமைச்சர் சித்தராமையாவின் விளக்கத்தை  ஏற்காத எதிர்கட்சிகள், இந்த புகாரில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும்,  முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மூடா முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி சமூக ஆர்வலர் டி. ஜெ. ஆப்ரஹாம், ஆளுநர் தாவர்சந்த் கெலாடிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். 

இதனிடையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கொடுத்த முதல்வர் சித்தராமையா, ஆளுநர் கெலாட்டை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்த விஷயத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் இன்று காலை ஒப்பதல் வழங்கி உள்ளார். அதற்கான கடிதத்தை மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஷிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநர் கெலாட்டின் அதிரடி நடவடிக்கை மாநில அரசில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.