"மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்" – மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை முறியடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 10 முதல் 12 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே வழங்க முடிவு எடுத்ததாக தெரிகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திரிணாமுல் தனித்து போட்டியிடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வைக்காது. இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்.. ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்ற மம்தாவின் அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் ‘INDIA' கூட்டணிக்கு மேற்குவங்க மாநிலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.