பஞ்சாயத்து தேர்தலின் போது எதிர்க்கட்சியினரை மக்கள் மூங்கில் கம்பால் அடிப்பார்கள்.. மம்தா கட்சி பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு

 
நுஸ்ரத் ஜஹான்

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது எதிர்க்கட்சியினை மக்கள் மூங்கில் கம்பால் அடிப்பார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையும், பாசிர்ஹாட்  மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான் தனது தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது: இன்று என்ன சதி செய்கிறார்கள் பாருங்கள். அவர்கள் மக்களுக்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டனர்.மக்களை மிரட்ட முயன்றனர். மதத்துடன் விளையாடினார்கள். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. 

மம்தா பானர்ஜி

2021ல் இஸ் பார் 200 பார் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் தோல்வியடைந்து அவர்களின் படகு கவிழ்ந்தது. இந்த முறை பெரிய சதித் திட்டத்தை அவர்கள் திட்டமிடுகிறார்கள்.  மேற்கு வங்கத்துக்கு மக்கள் பணத்தை நிறுத்தினார்கள். மம்தா பானர்ஜியின் மக்களுக்கான பணியை தடுக்கும் சதி இது. மாநில அரசுக்கு 100 நாள் உத்தரவாத வேலை திட்டத்துக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளனர். அவர்கள் மேற்கு வங்கத்துக்கு எதையும் கொடுப்பதில்லை.  

பா.ஜ.க.

மேற்கு வங்க மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற ஏன் நினைக்கிறீர்கள்?. அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?. உங்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது. பஞ்சாயத்து தேர்தலின் போது இங்கு யார் வந்தாலும், அது பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, அவர்களை பாசிர்ஹாட் மக்கள் மூங்கில் கம்பால் அடிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.