ஆளுநரின் செயல் சரியல்ல- டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டார் என புகார் கூறி அலுவல் ஆய்வுக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. காங்கிரஸ் பிரதிநிதிகளும் மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார்.
அதன்பின் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாததுபோல் இருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை. மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய ஒன்றிய அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல.. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 142 நாட்கள் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் ” என்றார்.
முன்னதாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக்கோரி திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோடீஸ் அளிக்கப்பட்டது. அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.