அசுரனுக்கு சேவை செய்வது மகனுக்கு அவமானம்.. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ்

அசுரனுக்கு சேவை செய்வது மகனுக்கு அவமானம் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மறைமுகமாக தாக்கினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 1980ல் எனது தந்தை கே.சுப்பிரமணியம் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார். 1980ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் நீக்கிய முதல் செயலாளராக எனது தந்தை இருந்தார். தனது தந்தை பாதுகாப்பு துறையில் அறிவு மிகுந்த நபர் என்று எனது தந்தையை அனைவரும் சொல்வார்கள். எனது தந்தை மிகவும் நேர்மையான நபர், அதுதான் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம், எனக்கு தெரியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவ்ஹர் சிர்கார், பிரதமர் மோடியை அசுரன் என்றும், மோடியின் தலைமையின்கீழ் பணியாற்றுவது ஜெய்சங்கருக்கு அவமானம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவ்ஹர் சிர்கார் டிவிட்டரில், எஸ்.ஜெய்சங்கரின் தந்தை கே.சுப்பிரமணியம், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை குஜராத்தில் தர்மம் கொல்லப்பட்டது, அப்பாவி மக்களை பாதுகாக்கத் தவறியவர்கள் அதர்மக் குற்றவாளிகள் என்றார்.
ராமர் குஜராத்தின் அசுரர் (நரேந்திர மோடி) ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது வில்லை பயன்படுத்தியிருப்பார். அசுரனுக்கு சேவை செய்வது மகனுக்கு (எஸ்.ஜெய்சங்கர்) அவமானம். விசித்திரம், ஜெய்சங்கர் காந்திகளுக்கு எதிரான கோபத்தை கண்டுபிடித்தார். அவர்களுக்கு (பா.ஜ.க.) மிகவும் விசுவாசமாகச் சேவை செய்து, அவர்களுக்கு கீழ் சிறந்த பதவிகளை பெற்றுக் கொண்டார்?. இது மறதியா அல்லது அவர்வெளியுறவு அமைச்சராக முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு பெற்றதற்காக பா.ஜ.க. அரவணைத்து செல்கிறாரா? என பதிவு செய்து இருந்தார்.