கர்நாடகாவில் தனிபெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் - டி.கே.சிவகுமார்

 
tks

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். 

224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மாலை 6 மணிநிலவரப்படி, கர்நாடகாவில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலில் இருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறேன். அதே எண்ணிக்கையில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனவே தொங்கு சட்டப்பேரவை குறித்தோ, மஜதவுடன் கூட்டணி குறித்தோ பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு கூறினார்.