திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வை ஊழல் புகார் எதிரொலி- தேவஸ்தானம் முக்கிய முடிவு

 
tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வை ஊழல் புகார் எதிரொலியாக இனி தமிழ்நாட்டின் கோ - ஆப்டெக்ஸ் , ஆந்திராவின் ஆப்கோ மூலம் மட்டுமே வாங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

Tirupati Temple Trust Cheated Of ₹55 Crore In Silk Dupatta Scam; 5 Ways To  Spot Real Vs Fake Silk | Curly Tales

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு லட்டு பிரசாதத்திற்கான் நெய்யில் கலப்படம் கண்டறியப்பட்ட பிறகு அடுத்த ஊழலாக கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பட்டு சால்வை ஊழல்  பரபரப்பான விவாதமாக மாறியது. தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் பெற்ற தனியார் சப்ளையர் ஒருவர் மல்பெரி பட்டு சால்வைகளுக்குப் பதிலாக தரமற்ற பாலியஸ்டர் சால்வைகளை தயார்  செய்து சப்ளை செய்ததை தேவஸ்தான அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் சுமார் ரூ.350 முதல் ரூ.400 வரை மதிப்புள்ள இந்த சால்வைகள் 2015 முதல் ஒவ்வொன்றும் ரூ.1,389க்கு வாங்கப்பட்டதாகக் அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் ஊழல் தடுப்புப் பிரிவில்  புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த மோசடி தெரிய வந்தது. 

இதனையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சமீபத்தில் ஆந்திர மாநில அரசின் ஆப்கோ மற்றும் தமிழக அரசின் கோ - ஆப்டெக்ஸ்  பிரதிநிதிகளுடன்  சிறப்புக் கூட்டத்தை நடத்தினார். இரு அமைப்புகளும் தேவஸ்தானம் நிர்ணயித்த  தரங்களுடன் துணிகளை வழங்க ஒப்புக்கொண்டன. இதன் மூலம், சுவாமி மற்றும் தாயாருக்கு தேவையான அனைத்து துணிகளும் இப்போது அரசாங்கத்தால் நடத்தப்படும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் கோயில் மட்டுமல்லாமல் இதர தேவஸ்தானத்துடன் இணைப்பு கோயில்களுக்கு என ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு துணி தேவைப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில்  ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் உற்சவங்கள், மூலவருக்கும், திருமலைக்கு வருகை தரும் விஐபிக்களுக்கு பட்டு சால்வை கொண்டு  வேத ஆசிர்வாதம் வழங்கப்படுவதற்கும் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சால்வைகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூலவருக்கான 65 தூய ஜரி மெல்சாட் வஸ்திரம் ( புடவை ), உத்தரியம் செட்கள்  மற்றும் 1,080 பட்டுச் சேலைகள் தேவைப்படுகின்றன.

தேவஸ்தானத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பிற கோயில்களுக்கு 320 மெல்சாட் செட்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பட்டுச் சேலைகள் தேவைப்படுகின்றன. இவை தவிர  ஒவ்வொரு ஆண்டும் 36 ஆயிரம் பட்டு சால்வைகள், 60 ஆயிரம் பாலியஸ்டர் சால்வைகள், 10.8 லட்சம் பருத்தி ஆடைகள் மற்றும் 9 லட்சம் பருத்தி ஜாக்கெட் துண்டுகளையும் வாங்குகிறது. இனிமேல், ஆப்கோ மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆகிய இந்த  இரண்டு அரசு நிறுவனங்களிடமிருந்தும் மொத்தம் ரூ. 43 கோடி மதிப்புள்ள புடவைகள், சால்வைகள் மற்றும் பிற ஜவுளிப் பொருட்களை தேவஸ்தானம் 50:50 விகிதத்தில் வாங்கும். விநியோகத்தில் ஏதேனும் இடையூறுகள் அல்லது சிக்கல்களைத் தவிர்க்க இந்த முறையில் விற்பனையாளர்  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.