திருப்பதி கூட்ட நெரிசல் இறப்புக்கு இதுவே காரணம்- ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி
திருப்பதி கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் , முதல்வர் முதல் அதிகாரிகள் வரை பொறுப்பேற்க வேண்டும் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 35 பக்தர்கள் காயமடைந்தனர்.காயமடைந்து சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவம் தேவஸ்தான நிர்வாகம் கூட்டத்தை கையாண்ட விதம் முழுமையான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு மாநில அரசாங்கம், தேவஸ்தான நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து உடனடியாக முழு பொறுப்பேற்க வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். ஆனால் திருப்பதி வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோகமான சம்பவம் எப்போதும் நடந்ததில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் உரிய ஏற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை? எனவே தேவஸ்தான நிர்வாகம் மற்றும் மாநில அரசு அலட்சியம் மற்றும் திட்டமிடல் இல்லாமையே காரணம் என்றார். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஏன் டிக்கெட் கவுன்டர்களில் முறையான ஏற்பாடுகள் இல்லை ? ஏன் தேவையான பாதுகாப்பு போடப்படவில்லை?
நிர்வாகமும் காவல்துறையும் முறையாக செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். ஜனவரி 6 முதல் 8 ம் தேதி வரை முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் இருந்ததால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்தினர். திருப்பதியில் திரளான கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல், தனது தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக காவல்துறை முதல்வர் பயன்படுத்தி கொண்டார். பத்மாவதி பூங்கா மையம் மற்றும் பைராகிப்பட்டிடா கவுன்டர்களில் காலை 9 மணி முதல் மக்கள் காத்திருந்தனர். ஆனால் கவுன்டர்கள் இரவு 8:30 மணிக்கு மட்டுமே திறக்கப்பட்டன. இந்த தாமதம் மற்றும் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் குழப்பம் பக்தர்கள் இடையே ஏற்பட்டது. தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்கள் பொறுப்புகளை செய்ய தவறிவிட்டனர். கூட்டத்தை எதிர்பார்த்திருந்தும், மோசமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சோக சம்பவம் நடந்தது. எப்.ஐ.ஆ.ர் பிரிவு 194 பி.என்.எஸ்.எஸ். இன் கீழ் செய்யப்பட்டுள்ளது . அது தவறானது என்றும், அதற்கு பதிலாக அரசாங்க அலட்சியம் தொடர்பான பிரிவு 105 BNSS ஐப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கூட்ட நெரிசலுக்கு முதலமைச்சர், தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், இ.ஓ. , கூடுதல் இ.ஓ, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முழுப் பொறுப்பேற்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கருணைத் தொகையாக வழங்க வேண்டும். கூட்டத்தை நிர்வகிப்பதில் உடனடி சீர்திருத்தங்கள், குறிப்பாக வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, எதிர்காலத்தில் இது போன்ற அவலங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் அசம்பாவிதங்கள் இல்லாமல் திறமையாக நிர்வகிக்கப்பட்டது. இந்த நெரிசல் தற்போதைய நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு ஒரு தெளிவான உதாரணம் என்றும், பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறுத்து முழுமையான விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். திருமலையின் புனிதம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என கேட்டு கொண்டார்.