திருப்பதி லட்டு- நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பாமாயில் கலப்பு: தேவஸ்தான அதிகாரி
ஏ.ஆர்.டைரி புட்ஸ் மாதிரிகளை சோதனை செய்ததில் அவர்கள் தரமற்ற நெய் விநியோகம் செய்தது தெரியவந்ததாக தேவஸ்தான அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், “ஆந்திராவில் புதிய அரசு பதவியேற்ற பின் முதல்வர் சந்திரபாபு என்னை இ.ஒ.வாக நியமிக்கும் முன் என்னை அழைத்து லட்டு, பிரசாதம் தரமில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே அங்கு சென்ற பின்னர் தரமானதாக மாற்ற வேண்டும். பக்தர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக ஆன்மீக பயணமாக இருக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து நான் பதவியேற்ற பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததில் நெய் தரம் இல்லை. இதனால் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்தை அழைத்து தரமில்லாமல் சப்ளை செய்யாமல் இருந்தால் ஒப்பந்தம் ரத்து செய்து பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் நெய் சப்ளை செய்த தமிழகத்தில் திண்டுகல் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர். டைரி நிறுவனத்தினர் தொடர்ந்து தரம் குறைந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்திற்கு கடந்த ஆட்சியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12 ம் தேதி தேவஸ்தானத்திற்கு செய்ய ஒரு கிலோ 320 என ஒப்பந்தம் வழங்கி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தேவஸ்தானத்தில சொந்தமான ஆய்வகம் இல்லை. எனவே மத்திய அரசின் அங்கிகாரம் பெற்ற என்.டி.டி.பி. ஆய்வகத்திற்கு இந்த ஆண்டு ஜுலை 6 மற்றும் 12 ம் தேதிகளில் மொத்தம் 4 டேங்கர் லாரிகளில் இருந்த நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் 95.68 முதல் 104.32 இருக்க வேண்டும், ஆனால் மிகவும் கலப்பட செய்திருப்பதும். நெய் போன்று இருக்கும் ஆனால் நெய் இல்லை. நெய்யில் மாட்டு கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பது நான்கு சோதனையில் ஒரே மாதிரியான முடிவுவந்தது. இதனால் அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியாத வகையில் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நிபுணர் குழு அமைத்து எவ்வாறு டெண்டர் அழைக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு கலப்படம் செய்துள்ளனர். எனவே தேவஸ்தானமே சொந்த ஆய்வகம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான என்.டி.டி.பி. ஆய்வகம் தாமாக முன்வந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஆய்வக பொருட்கள் வழங்க முன் வந்துள்ளனர். எனவே இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல இருக்க தேவஸ்தானத்திற்கு சொந்தமாக ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.