பா.ஜ.க. எங்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அழைத்தால் நாங்கள் பேச தயார்.. திப்ரா மோதா கட்சி அறிவிப்பு

 
பிரத்யோத் மாணிக்ய டெபர்மன்

பா.ஜ.க. எங்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அழைத்தால் நாங்கள் அவர்களுடன் அமர்ந்து பேசுவோம் என்று திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்ய டெபர்மன் தெரிவித்தார்.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 33 இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்க தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதேசமயம், கடந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கிய திப்ரோ மோதா என்ற கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை வென்ற 2வது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திரிபுராவில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் சி.பி.எம். கோட்டையாக கருதப்பட்ட நிலையில் அதனை திப்ரா மோதா தகர்த்தது. திரிபுரா அரசுக் குடும்பத்தை சேர்ந்த பிரத்யோத் மாணிக்ய டெபர்மன் இந்த கட்சியின் தலைவராக உள்ளார்.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

திப்ரா மோதா கட்சி தனி மாநில கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுரா வந்த அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், திப்ரா மோதா கட்சியுடன் பா.ஜ.க. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்தார். இது தொடர்பாக திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்ய டெபர்மன் கூறியதாவது: எங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதை நான் கேள்விப்பட்டேன். அவர்கள் எங்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அழைத்தால் நாங்கள் அவர்களுடன் அமர்ந்து பேசுவோம். 

பா.ஜ.க.

ஆனால் எந்த பதவியின் அடிப்படையிலும் இல்லை,  திரிபுராவின் அரசியலமைப்பு தீர்வு அடிப்படையில் மட்டுமே அவர்களுடன் பேசுவோம். நாங்கள் திரிபுராவின் பழங்குடி மக்கள். எங்களின் உரிமைகளை புறக்கணித்து திரிபுராவில் ஆட்சி அமைக்கலாம் என நினைத்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திரிபுராவின் பழங்குடியின மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காக திப்ரா மோதா உருவாக்கப்பட்டது. திரிபுராவிற்கு அரசியலமைப்பு சட்ட ரீதியில் தீர்வு காண்பதில் பா.ஜ.க. உறுதியாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை பலன் தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.