இது பிரதமர் மோடியின் தோல்வி - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ..

 
இது பிரதமர் மோடியின் தோல்வி - சத்தீஸ்கர் முதல்வர்  பூபேஷ் பாகல் ..

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இந்த தோல்வி பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வி என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்திருக்கிறார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 36 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  பெரும்பாண்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில்,  காங்கிரஸ் கட்சி - 133 முன்னிலை வகிக்கிறது.  பாஜக - 66 இடங்களிலும், மஜத - 22 இடங்களிலும்,  மற்றவை  3 இடங்களிலும்  முன்னிலையில் இருந்து வருகின்றன. கிட்டதட்ட காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் , நாடு முழுவதும்  உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும்,  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

modi

இந்த நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தனது வீட்டுக்கு வெளியே  கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளன. பிரதமர் மோடி தன்னை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எனவே இது பிரதமர் மோடியின் தோல்வி. பஜ்ரங்பலி யார் பக்கம் நின்றார் என்பது இப்போது தெரிந்திருக்கும். அவரது கதாயுதம் ஊழல்வாதிகளின் தலையில் ஓங்கி அடித்துள்ளது. மோடியின் புகைப்படங்கள் டிவி சேனல்களிலிருந்து மறையத் தொடங்கியதுமே கர்நாடக தேர்தல் முடிவுகளை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.” என்று தெரிவித்தார்.