எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்திய கர்நாடகாவின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா

 
கர்நாடகாவின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற முதல்வர் சித்தராமையா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா, 2024 மக்களவை  தேர்தலுக்கு முன்னாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக இருந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதனையடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது உறுதியானது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரையும் காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது. நேற்று பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

டி.கே. சிவகுமார், சித்தராமையா

அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையாவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து மாநில துணை முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சி.பி.எம். தாலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

கர்நாடக புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருந்தது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலனா பாரத் ராஷ்டிர சமிதி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைக்கவிடுக்கவில்லை என தகவல். அதனால்தான் அந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.