5வது நாளாக முதல்வர் பதவிக்கு இழுபறி நீடிப்பு.. கர்நாடக அரசியலில் பரபரப்பு..

 
5வது நாளாக முதல்வர் பதவிக்கு இழுபறி நீடிப்பு.. கர்நாடக அரசியலில் பரபரப்பு..

முதலமைச்சர் பதவி கேட்டு டி.கே.சிவக்குமார்,  சித்தராமையா ஆகியோர் உறுதியாக இருப்பதால்,  அவர்களிடம் கார்கே தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் 5வது நாளாக இழுபறி  நீடிக்கிறது. அங்கு முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் பதவி தங்கள் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் முதல்வர் பதவிகேட்டு சிவக்குமாரும், சித்தராமையாவும் உறுதியாக இருப்பதால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. முன்னதாக இதுகுறித்து முடிவெடுக்க கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

Sonia kharge

அதன்படி, சித்தராமையா நேற்று முன் தினமே டெல்லிக்குச் சென்றுவிட்டார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து முதல்வர் பதவியை தமக்கே தரும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.  அதேநேரம் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்தானதால் முதல்வர் யார் என்பது குறுத்து முடிவெடுக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கட்சி மேலிட அழைப்பின் பேரில் டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தார்.  சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, அவர் கட்சிக்காக தான் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டுள்ளார். அத்துடன் சித்தராமையா ஏற்கனவே முதல்வராக இருந்ததாகவும், ஆகையம் தமக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

5வது நாளாக முதல்வர் பதவிக்கு இழுபறி நீடிப்பு.. கர்நாடக அரசியலில் பரபரப்பு..

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் சித்தராமையா மீண்டும்  மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும்,  ஏற்கனவே இதுதான் தன்னுடைய கடைசி தேர்தல் என அறிவித்திருப்பதால் தனக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.   இருதரப்பும் பிடிவாதமாக இருப்பதால், டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மாறி, மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினார். அவர் சித்தராமையாவை முதல்வராக்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  நாளை (18-ந் தேதி) அல்லது 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், இன்றுக்குள் அடுத்த முதல்வர் யார் என்கிற இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.