செல்ஃபோன் செயலி, வலைப்பக்கம் எல்லாம் ரெடி.. நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..
நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் செல்ஃபோன் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆகையால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே கடைசியாக உள்ளது. இதனிடையே மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை ஏற்று 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்த்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி, 2027 மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் , 2026ம் ஆண்டு பிற்பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கி 2028ம் ஆண்டு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 34 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் அதிகாரிகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், லடாக், ஜம்மு -காஷ்மீர் யுனியன் பிரதேசங்கள் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பனிப்பொழிவு உள்ள மாநிலங்களில் மட்டும் 2026 அக்டோபர் 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற மாநிலங்களில் 2027 மார்ச் 1ம் தேதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

அந்தவகையில் நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் செல்ஃபோன் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆங்கிலம் , இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் செல்ஃபோன் செயலிகள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு நேரடியாக அனுப்பப்படும். மக்கள் தொகை விவரங்களை பெற முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யும் வகையில் வலைபக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


