நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

 
Karnataka

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நாளை அம்மாநில சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது. 

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.  .   இந்த நிலையில், சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதேபோல் கர்நாடக மாநில துணை முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார்.   இதனை தொடர்ந்து அமைச்சர்களாக 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர். எம்.எல்.ஏக்கள் எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.  

இந்த நிலையில், நாளை கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பேரவை தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பேரவையின் புதிய தலைவர், கூட்டத்தொடரின் போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.