காதல் திருமணம் செய்து கொண்ட ரவுடி படுகொலை- பாட்டி, தந்தை, சகோதரர்கள் கைது

தெலுங்கானாவில் ஆறு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாட்டி, தந்தை, சகோதரர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம் மாமிட்லகட்டா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா அதேபகுதியை சேர்ந்த பார்கவி என்ற பெண்னை காதலித்து ஆறு மாதத்திற்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பார்கவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு வீட்டாரையும் போலீசார் முன்னிலையில் கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர். அதனால் பெற்றோர் மூலம் எந்த பாதிப்பு இருக்காது என பார்க்கவியும் கிருஷ்ணாவும் அது ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மாமிட்லகட்டா கிராமத்திற்கு வெளியே கிருஷ்ணாவை அடித்து தலையில் கல்லை வீசி கொலை செய்தனர். அங்கிருந்து உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று மூசி நதி கால்வாய் அருகே வீசி சென்று விட்டனர்.
இந்நிலையில் 27-ம் தேதி காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணா உடல் கிடப்பதை பார்த்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சூர்யா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணா கொலை வழக்கில் கலப்பு திருமணம் செய்ததால் குடும்பத்தினரே செய்த ஆணவ கொலைதான் காரணம் என முடிவு செய்தனர். மேலும் பார்க்கவி அளித்த தகவலின் அடிப்படையில் இறுதியாக மகேஷ் என்பவர் போன் செய்து அழைத்ததன் பேரில் கிருஷ்ணா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறினார்.
இதனையடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு பார்கவியின் பாட்டி பிச்சம்மா (65), தந்தை சைதுலு (45), சகோதரர்கள் வம்சி, நவீன், மற்றும் நவீன் நண்பர்களான மகேஷ், நல்கொண்டாவை சேர்ந்த சாய்சரண் ஆகியோர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. பார்கவி கலப்பு திருமணம் செய்து கொண்டதால் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று நான்கு முறை கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டு பொதுமக்கள் கூட்டம் மற்றும் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனது. ஆனால் எப்படியாவது கிருஷ்ணாவை கொலை செய்ய வேண்டும் என ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு வந்துள்ளனர். நவீனின் நண்பரான மகேஷ் கடந்த நான்கு மாதங்களாக கிருஷ்ணாவுடன் பழக ஆரம்பித்தார். கிருஷ்ணாவும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி வியாபாரம் குறித்து பேசலாம் என கிருஷ்ணாவை மகேஷ் தனியாக அழைத்து வந்துள்ளார். பின்னர் மாலை 6 மணி முதல் இருவரும் மது அருந்த இருந்த நிலையில் கிருஷ்ணா மது அருந்தாமல் குளிர்பானம் மட்டும் குடித்து வந்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி நவீன் மற்றும் வம்சி அந்தப் பகுதியில் முட்புதரில் மறைந்திருந்தனர். இறுதியாக கிருஷ்ணா இரவு 8.30 மணிக்கு புறப்பட தனது பைக்கில் தயாரான போது மகேஷ் சைகை அளித்த நிலையில் நவீனும், வம்சியும் மறைந்திருந்த இடத்திலிருந்து உடனடியாக வந்து மூவரும் சேர்ந்து கிருஷ்ணாவை ஆயுதங்கள் இல்லாமல் கைகளால் மற்றும் கற்கள் வீசி தாக்கி கொலை செய்தனர். தனது பாட்டிக்கும் தந்தைக்கும் போன் செய்து கிருஷ்ணாவை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்களும் நம் குடும்ப மானத்தை வாங்கியவனை கொன்று விட்டாயா என பாராட்டியுள்ளனர்.
பின்னர் அவர்களது காரில் மூட்டையாக கட்டி சடலத்தை நல்கொண்டாவில் உள்ள சாய்சரண் மூலமாக மறைக்க முயன்றனர். ஆனால் சாய்சரண் சடலத்தை பார்த்து அதனை ஏற்க மறுத்த நிலையில் மீண்டும் காரில் கொண்டு வந்து மூசி நதி அருகே வீசி சென்றனர். இந்த கொலைக்கு பயன்படுத்திய 1 கார், ஐந்து செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன் மீது நான்கு வழக்குகளும், மகேஷ் மீது ஒன்பது வழக்குகள், வம்சி மீது மூன்று வழக்குகள், பாட்டி பிச்சம்மா மற்றும் தந்தை சைதுலு மீது தலா இரண்டு வழக்குகள், சாய்சரண் மீது ஒரு வழக்கும், இறந்த கிருஷ்ணா மீது நான்கு வழக்குகள் இதற்கு முன்பு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் எஸ்சி, எஸ்டி பிரிவுகள், ஆணவக்கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. சன்பிரீத் சிங் தெரிவித்தார்.