“தைரியம் இருந்தா புடிங்க..” என சவால் விட்டவரை தட்டித் தூக்கிய தெலங்கானா போலீஸ்

 
ச் ச்

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.3000 கோடி  இழப்பை ஏற்படுத்தி போலீசாருக்கு சவால் விட்ட 'ஐ போம்மா' நிர்வாகியை போலீசார்  கைது செய்தனர்.

'ஐபோம்மா' வலைத்தளத்தை திரைப்பட ரசிகர்களுக்கு  அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஐபோம்மா (பாப்பம்) இணையத்தில் பிரபலமான ஓ.டி.டி.களில் வெளியாகும் புதிய திரைப்படங்களை ஒரு பைசா கூட செலவழிக்காமல் சில நிமிடங்களில் எஸ்.டி. தரத்தில் வழங்கி வருகிறது.  இதனால் அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் ஆஹா போன்ற பிரபலமான ஓ.டி.டி. தளங்களில் சந்தாக்கள் குறைவதற்கு ஐபோம்மா என்ற திருட்டு இணையதளம் காரணமாகும். சமீப காலம் வரை, ஓ.டி.டி. யில் திருட்டு உள்ளடக்கத்தை மட்டுமே வெளியிட்டு அதன் தளத்தில் வெளியிட்ட ஐபோம்மா, சில நாட்களாக டோலிவுட்டில் வெளியாகும் புதிய படங்களின் திரையரங்க எச்.டி. பிரிண்டை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது. 

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஐ-போம்மா மீது போலீசில் புகார்  அளித்தனர்.  தயாரிப்பாளர்களின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூனேவில் இருந்து சிலரை கைது செய்தனர். இதற்கு பதில் அளித்த ஐபோம்மா நிர்வாகி ரவி போலீசாருக்கு சவால் விடுத்து முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள் என சவால் விடுத்தார். இதனால் கடந்த ஆறு மாதங்களாக ஐ போம்மா நிர்வாகி ரவியை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் ரவி நடமாட்டத்தை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்தநிலையில் பிரான்சில் இருந்து  ரவி ஹைதராபாத் வந்தார். இதனை அறிந்த  ஐதராபாத்தின் குகட்பள்ளியில் சிசிஎஸ் போலீசார் அவரை  கைது செய்தனர். அவர் கரீபியன் தீவுகளில் வசித்து  ஐ-போம்மா இணையத்தை நடத்தி வந்துள்ளார். தெலுங்கு திரைப்படங்களின் திருட்டு மற்றும் ஓ.டி.டி. படங்களை   தனது  இணையத்தில்  இலவசமாக வெளியிட்டு வந்ததை கண்டறிந்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.3 கோடியை போலீசார் முடக்கியுள்ளனர். அவரது சர்வர்களை  ஆய்வு செய்தபோது  திரைப்படத் துறைக்கு ரூ.3,000 கோடி வரை ரவி இழப்பை ஏற்பட்டத்தியது தெரிய வந்தது.