முதலமைச்சரின் கவனத்துக்கு சென்ற ரோட்டு கடை! சமூக வலைதளம் மூலம் பிரபலமான குமாரி ஆன்ட்டி
தெலங்கானாவில் சமூக வலைதள பிரபலமான குமாரியின் சாலையோர கடையைக் காவல்துறையினர் போக்குவரத்து காரணங்களால் மூடிய நிலையில், அவரது கடையை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஆர்பிட்மால் அருகே ஐடிசி கோஹினூர் எதிரே ரோட்டோரத்தில் குமாரி என்பவர் தனது கணவர், மகனுடன் இணைந்து உணவு கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடைக்கு யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் விலாக் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் சென்று பதிவிட்டதால் குமாரி ஆன்ட்டி உணவு கடை பிரபலம் அடைந்தது. சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்த நிலையில் கடைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு கடைக்கு வருபவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து போலீசார் சென்று இரண்டு தினங்களுக்கு முன்பு கடைக்கு சீல் வைத்து வாகனத்தை பறிமுதல் செய்து குமாரி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பைரிலான நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்கள் என சமூக வலைத்தளங்களில் குமாரி ஆண்ட்டி உணவு கடைக்கு ஆதரவு தெரிவித்து பதிவு செய்தனர்.
இவை அனைத்தும் பரபரப்பாக மாறியதால் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையிட்டு வழக்கம் போல் அங்கு உணவு வாகனம் அமைக்க அனுமதி அளிக்குமாறு போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். மேலும் விரைவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி குமாரி ஆண்டி கடைக்கு செல்ல இருப்பதாக முதல்வர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவாக இருந்த அரசு மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு குமாரி நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் நாங்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்வோம் என்றார். குமாரி உணவு கடைக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், அப்பகுதிக்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குமாரி உணவு கடை அதிக மக்கள் சென்றடைவதால் போக்குவரத்து போலீசார் அங்கு ஒரு காவலரை நிரந்தரமாக நியமித்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் செல்ல அமைக்கப்பட உள்ளனர்.