ஆசிரமத்தை பிரபலப்படுத்த ரூ.5 கோடி பெற்றாரா விராட் கோலி?
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்தை பிரபலப்படுத்த ரூபாய் 5 கோடி கட்டணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு சென்று வந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் மரியாதையின் காரணமாகவே சென்று வருவதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

பிருந்தாவனத்தில் உள்ள ஆன்மீகத் தலைவர் பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்தைப் பார்வையிட, இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை கோலியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். ஃபலாஹரி மகாராஜ் எனப் பிரபலமாக அறியப்படும் தினேஷ் சர்மா முன்வைத்த குற்றச்சாட்டு, செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்ததைத் தொடர்ந்து விராட் கோலி தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸின் தலைவரான சர்மா, பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்கு கோலியை அழைத்து வர 5 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ஆசிரமத்திற்குச் சென்றதற்காக கோலி 5 கோடி ரூபாய் பெற்றார் என்பதை நிரூபிக்கும் விதமாக எந்தவொரு பணப்பரிவர்த்தனை ஆவணமோ, ஒப்பந்தமோ அல்லது பிற ஆதாரமோ வெளிவரவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோலியின் செய்தித் தொடர்பாளர், அந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மையில் தவறானவை. பிரேமானந்த் மகாராஜை கோலி சந்தித்தது, அந்த ஆன்மீகத் தலைவர் மீதான அவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் மரியாதையே காரணம் என்றும் கூறியுள்ளார். கோலியும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜை பலமுறை சந்தித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

