“3 தமிழர்கள் சுட்டுக் கொலை: தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது”- கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தோணி சாமி, ஜான் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள், கடந்த 14ஆம் தேதி தங்கள் கால்நடைகளை காணவில்லை என்பதற்காக அவற்றை தேடி கர்நாடக வனப்பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அப்போது கர்நாடக வனத்துறையினர் சுட்டதில் அந்த 3 பேரும் உயிரிழந்த நிலையில், உடன் சென்ற ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திரு. ரஞ்சித் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், “3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது.
நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். எங்கள் மாநிலத்தை எப்படி காப்பது என எங்களுக்கு தெரியும் என்பதை தமிழ்நாடு உணர வேண்டும்” என்றார்.

