“இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்”- நரேந்திர மோடி மீன் மார்க்கெட்... சூரத்தில் வெடித்தது சர்ச்சை
சூரத் மாநகராட்சி அனுமதியின்றி பிரதமர் மோடியின் பெயரில் மீன் சந்தை அமைக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
சூரத்தின் நான்புரா-லக்கட்கோட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட மீன் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வளாகத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டும் செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், மீன் மார்க்கெட்டின் பிரதான நுழைவாயிலில் 'ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த மீன் சந்தை' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது. அந்தப் பலகையின் ஒரு மூலையில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த மீன் சந்தை ரூ. 3.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பிரதமரின் பெயரை அந்த இடத்திற்குச் சூட்டுவதற்கு சூரத் மாநகராட்சியால் எந்தவொரு அதிகாரப்பூர்வ தீர்மானமோ அல்லது முறையான அனுமதியோ வழங்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அனுமதி பெறாத அந்தப் பலகையை அகற்றுவதற்காக மாநகராட்சிக் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்ற நிலையில், உள்ளூர் வியாபாரிகள் தாங்களே அதை அகற்றிவிடுவதாக உறுதியளித்ததால் அக்குழுவினர் பின்வாங்கிவிட்டனர். பிரதமர் மோடி சைவ உணவு உண்பவர் என்பதால், அவரது பெயரை மீன் சந்தைக்கு வைப்பது பொருத்தமற்றது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

