உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் முடக்கம்..!
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சேனலில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்ச நீதிமன்ற நேரடி வழக்கு விசாரணை ஒளிபரப்பு நடவடிக்கைகள் பாதித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் விசாரணை , அரசியல் சாசன அமர்வின் விசாரணை , உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை “சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா” என்னும் யூடியூப் வலைதள பக்கத்தில் நேரலையாகவும், வீடியோ பதிவுகளாகவும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 2.17 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட உச்சநீதிமன்ற பக்கம் மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது.
“சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா” எனும் பெயர் RIPPLE “ரிப்பிள்” என ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளனர். மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பான நேரலை வீடியோவை ஹேக்கர்கள் அந்த சேனலில் பகிர்ந்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளின் வீடியோக்கள் மற்றும் தினசரி வழக்கு விசாரணையின் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கக்கூடிய பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.