‘பெங்களூருவில் பாகிஸ்தான்..’ கர்நாடக ஐகோர்ட் நீதிபதியின் சர்ச்சை பேச்சு - உச்சநீதிமன்றம் கண்டனம்..
பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பாகிஸ்தான் என்று கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வேதவ்யாசாச்சார் ஸ்ரீஷானந்தா தலைமையிலான அமர்வில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இன்சூரன்ஸ் & மோட்டார் வாகன சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, பெங்களூருவில் உள்ள கோரி பால்யா எனும் பகுதியில் இருந்து பூ மார்க்கெட் பகுதி வரை உள்ள மைசூர் மேம்பாலம் பாகிஸ்தானில் உள்ளது போல காட்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரே ஆட்டோவில் 10 பேர் செல்லும் நிலையில், குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு கண்டிப்பான அதிகாரியை பணியமர்த்தினாலும் அவர் தாக்குதலுக்கு ஆளாவார் என்றும் நீதிபதி பேசினார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குறிப்பிட்ட பகுதிகள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளதால் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.
சமூக வலைதளங்களில் நீதிபதியை பலர் விமர்சித்தும், சிலர் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொள்வதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி ஸ்ரீஷானந்தா தொடர்பான மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், வழக்கு விசாரணையின் போது, பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் நீதிபதி அநாகரிகமான வார்த்தைகளால் பேசியிருந்தார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் , நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா , பி.ஆர் கவாய் , சூரியகாந்த் , ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை தானாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.
அப்போது குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கையை பெற்று, அதனை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இக்கால கட்டத்தில் நீதிமன்ற பணிகள் மற்றும் நீதிபதிகளின் கருத்துக்கள் தீர்ப்புகள் உத்தரவுகள் உள்ளிட்டவை உன்னிப்பாக உற்று நோக்கப்படுவதாகவும், எனவே நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை மனதில் வைத்து நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் செயல்பட வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார். மேலும் ஒரு வழக்கை கையாளும்போது எத்தகைய கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது எஎன்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.